Wednesday, May 28, 2008

பொம்மை காதல்

மு.கு: கதை கொஞ்சம் நீளமா போயிடுச்சு.. அதுனால எக்ஸ்ட்ரா கல்லெல்லாம் எரியாதீங்க மக்கா!
---------------------------------------------------

இரகசிய கனவுகள் ..ஜல் ஜல்.. என் இமைகளை தழுவுது.. சொல் சொல்... நூறாவது நாளாக ஒரு நிமிஷம் முழுவதாய் பாடி முடித்தும் செல்பேசியை எடுக்கவில்லை அவள். இன்றோடு சரி. இனிமேல் அவளை அழைக்க போவதில்லை என முடிவு செய்தவனாக, மனசு சரியில்லாமல் 7த் கிராஸில் இருக்கும் பார் ஒன்றுக்கு நண்பனையும் வர சொல்லிவிட்டு கிளம்பினேன்.

வருகின்றேன் என சொன்னவனை தேடிக்கொண்டிருந்தன என் கண்கள். அப்பொழுது தான் அந்த சப்தம் கேட்டது.
'ஹார்ப் இருக்கா?'
அட, நமக்கு பிடிச்ச பிராண்ட் என திரும்பி பார்க்க, அவனும் திரும்பி பார்த்தான். 25 வயதுமிக்க இளைஞன். முழுக்கை சட்டை, டை என பக்காவாக உடை அணிந்து இருந்தான்.
ஒரு கணம் கண்கள் சந்தித்துக்கொண்டன.
'வாங்க சார், இந்த டேபிள்ல நான் மட்டும் தான இருக்கேன்.. நீங்களும் வாங்க'
சரி, வருவதாக சொன்னவனை தான் காணோம். 'பார்'இல் மட்டுமே பூக்கும் விநோத நட்பில் ஒன்றாக போகட்டும் என்று அவன் அருகில் சென்று அமர்ந்தேன்.
'ஹாய்.. ஐ ஆம் சூர்யா'
'நான் மதன் சார். ICICI பாங்கில் அக்கவுண்ட் மேனஜராக இருக்கின்றேன். cross cut ப்ராஞ்ச் தான். கண்ணன் டிபார்ட்மண்ட்டல் ஸ்டோர் எதிர்ல..' இப்படியாக அவன் முழு நீள பயோடேட்டாவை உள்ளே ஏத்தி இருந்த சரக்கு வெளியே கொண்டு வந்தது.

திடீரென கேட்டான்.
'காதலிச்சு இருக்கீங்களா சார்'
'ஹ்ம்ம்.. ஆமா...' அவள் என்னோடு பேசி கிட்டதட்ட மூன்று மாதம் ஆகுது. அந்த சோகத்தில் தான் நான் இங்கே வந்திருப்பதை சொன்னேன்.
'என்ன சார் பிரச்சனை உங்களுக்குள்ள'
வெளியாளிடம் அதிகம் சொல்ல விரும்பாமல், சும்மா ஆரம்பித்த சண்டை, ஈகோவில் சிக்கி, காரணமில்லாமல் நீண்டு இப்பொழுது அவள் என்னோடு பேசாமல் இருப்பதும், இனி நானும் அப்படி தான் இருக்க போவதாக எடுத்த முடிவையும் சொன்னேன்.
'அப்படி எல்லாம் விடக்கூடாது சார்.. என்ன இருந்தாலும் அது நம்ம காதல்... நம்ம காதலை நம்மளும் கைவிட்டுட்டா அது அநாதை ஆயிடும்ல..'
'...'
'காதல் கூட குழந்தை மாதிரி தான் சார்.. அது பிறந்து கொஞ்ச காலம், நாம தான் அத கவனமா பார்த்து வளர்க்கனும். விட்டுடோம்னா, அது செத்துடும்.. இல்லை அநாதை ஆயிடும்.. அதே காதல், கொஞ்ச நாள் கழிச்சு, அதை வளர்த்த உங்களையும் உங்க காதலியையும் கையை கெட்டியமா பிடிச்சு சேர்த்து நடக்க வைக்கும்.. ஆனா அதுக்கு நிறைய நாள் ஆகும்...அவ விட்டுட்டு போயிட்டாள் என்று நிங்களும் போயிட்டா?'
'ஹ்ம்ம்..மதன்.. தூங்கிறவங்களை தான் எழுப்ப முடியும்.. தூங்கிறவங்களை போல நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது.. காலம் ஆற்ற முடியாது காயம் எதுவும் இல்ல மதன்.. கொஞ்ச நாளுல சரியாகி விடுவேன்..'
'அப்படி இல்லை சூர்யா. இப்போ அப்பா, அம்மா, குழந்தைனு 3 பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில், குழந்தை இறந்திட்டா, ஒரு 5 வருஷம் கழிச்சு அந்த குடும்பத்தை பார்த்தால், இன்னொரு குழந்தை இருக்கலாம். சிரிச்சிட்டு கூட இருக்கலாம். ஆனா, இழந்த அந்த குழந்தைய நினைச்சு வேதனை அவங்களுக்கு இல்லை. மறந்துட்டாங்கனு சொல்லறது எப்படி மடத்தடமோ, அது தான் காதலுக்கும்... புதைக்கலாம்.. ஆனா அந்த வலி கண்டிப்பா இருக்கும்.. ........நீங்க இன்னும் முயற்சி செய்யனும் சார்'
'அதுவும் சரி தான்'

'....'
சில நிமிட மௌனங்களில் இன்னொரு கிளாஸ் காலி செய்தான்.

'நானும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் சார்'
'அப்படியா? ம்ம்ம் ....உன் கதைய சொல்லு'
'பேர் தெரியாது சார். அவ என் கூட இதுவரை பேசினதே இல்லை'
புருவம் உயர்த்தினேன்..
'ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆகுது..'
'ஹ்ம்ம்... அப்' இடையில் செல்பேசி அடிக்க ஆரம்பித்தது. நண்பன் தான். என்னை அவசரமாய் வெளியே வர சொன்னான். மதனிடம் சொல்லிவிட்டு, என் செல் நம்பரும், காசும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

'டேய், கடைக்கு வந்துட்டு ஏன்டா வெளிய நின்னுட்டு இருக்க'
'அது சரி.. நீ முதல்ல ஏன் அந்த லூசு டேபிள்ல உட்கார்ந்துகிட்டு இருக்கனு சொல்லு?'
'லூசா???'
'ஆமாம்டா.. அரை பைத்தியம். பாங்கில் வேலை செய்யறான். ஆனா, வேலைக்கு போகும் முன், தினமும் காலையில் பக்கத்தில் இருக்கும் ஆலூக்காஸ் ஜெவல்லரி டிஸ்ப்ளேவில் இருக்கும் மாடல் பொம்மைக்கு ரோஜாப்பூ வைப்பான். ஐ லவ் யூ சொல்லுவான்.... சாயங்காலமும் செய்வான்.. கேட்டால் அது தான் என் காதலினு சொல்லுவான்! லோக்கல் நியூஸ்ல கூட கொஞ்ச நாள் முன்னாடி வந்துச்சேடா. ஒன்றரை வருஷமா இதே அலப்பரை தான்..'
என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்..
'இதுக்கே திகைச்சிட்டியே.. இவன் போன வேலன்டைன்ஸ் டேக்கு என்ன செய்தான் தெரியுமா..' என கதை பேச ஆரம்பிக்க, அப்படியே கிளம்பினோம்..

மறுநாளில் இருந்து முடிவெடுத்தப்படி , நானும் அவளை அழைக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து

இன்னமும் அவள் வந்து பேசவில்லை. நானும் அவளை மறக்க பல முயற்சிகள் எடுத்து தினமும் தோற்றுக்கொண்டிருந்தேன்.

அன்று அதே பாருக்கு அதே நண்பனை வரச்சொல்லி இருந்தேன். அங்கே சென்றதும், சென்ற முறை அவன் அமர்ந்திருந்த டேபிளில் அவனை கண்கள் தேடின. காணவில்லை.
'என்ன சார்.. மதன் சாரை பார்க்கறீங்களா' பார் செர்வர்.
'ஆமாம்பா'
'அவர் யோக காரர் சார்.. பைத்தியம் கணக்கா பொம்மையை டாவடிச்சிட்டு இருந்தாரு. கடசில நிஜத்தில அந்த பொம்மைக்கு போஸ் கொடுத்த மாடல் பொண்ணுக்கு விஷயம் தெரிந்து, வந்து பார்த்து, லவ்ஸ் ஆகி, கல்யாணம் செய்துகிட்டு.... இப்போ சென்னையில் இருப்பதாக கேள்வி சார்'

கேட்டதும், என்னையும் அறியாமல் சிரித்தேன்.. ஏனோ அழ தோன்றியது. அதனால் சிரித்தேன்.

போதுமான காதல் இருந்தால், தூங்குவது போல் நடிப்பவர்களை மட்டும் அல்ல, இறந்து போனவர்களையும், உயிரற்ற பொம்மையையும் கூட உயிரூட்டி எழுப்பி விடலாம் என அவன் சொல்லாமல் சொல்லி சென்றதாக பட்டது.

உடனே அவள் செல்பேசிக்கு அழைப்பதென முடிவு செய்தேன்.. இன்னமும் அதே ரிங்டோன் பாடல் வைத்திருந்தாள்... ஒலிக்க தொடங்கியது...
இரகசிய கனவுகள் ஜல் ஜ
'ம்ம்ம்' பதில் எதிர்முனையில்.
அந்த விநாடி, மகரத்தை இதை விட அழகாய இசைக்க கூடியவர் எவரும் இல்லாமல் போனார்கள். என் மனதையும் தான்!

அந்த அதிர்ச்சியில் சட்டென்று முழிப்பு வந்தது. கனவு மட்டுமே தரும் ஏமாற்றம் மனதில் மெதுவாக படர தொடங்கியது. என்றைக்கோ பாரில் பார்த்தவன் மதன். அவனுக்கு கல்யாணம் ஆச்சு என்றெல்லாம் கனவு வருதே என சிரித்துக்கொண்டேன். என்னவள் குரல் பல நாட்கள் கழித்து கனவிலாவது கேட்டது, மனதை மெதுவாக குளிர செய்தது.

விடியக்காலை கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. அதனால், பல மாதம் கழித்து அன்று அவள் செல்பேசிக்கு அழைத்துப்பார்த்தேன். 'தாங்கள் அழைத்த தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை' பதிலாய் கிடைத்தது!

அதன் பின் என் நண்பனை அழைத்து மதனை பற்றி விசாரித்தேன்.
'ஓ அந்த பைத்தியமா, அவனை சிகிச்சைக்கு கேரளாவிற்கு அவன் பெற்றோர் அழைச்சிட்டு போயிருக்காங்கடா.. போய் ஒரு இரெண்டு மாதம் ஆகும்.. ஏன் கேட்கிற' என்றான்.

என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. சிரிக்க தான் தோன்றியது. அதனால் அழுதேன்.

Monday, May 26, 2008

காதல் முகமூடி (அழகிய கவிதை -VII)

மு.கு: இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி




விரதங்களின் முடிவு
பசியும்..
காதலின் முடிவு
பிரிவும்..
காத்திருப்பில் கலைந்த மேகங்கள்!

வானமாய் நானிருந்தாலும்
சிறு சிறு கோடுகளில்
என்னை அழகாக்கும்
வர்ணவில் நம் காதல்..



"இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?





அழகான உன் கோபங்களில்
ரசித்து மடியும்
விட்டில் பூச்சியாய்
நானும் என் காதலும்..

இடிகள் இடித்தாயிற்று
மின்னலும் வெட்டிவிட்டது
இனி..
மழை விழத்தானடி
மனம் காத்திருக்கிறது..



காதல் முகமூடி...
வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.

'அழகிய கவிதை..'
சொல்லிக்கொண்டே..
படித்து விட்டு
கிழித்தும் எறிந்தாய்..
--------------------------------------------------------------------------------
பி.கு: இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது.

Tuesday, May 13, 2008

கண்ணை விட்டு



கண்ணை விட்டு கண்ணிமைகள்
விடை கேட்டால்
கண்கள் நினையாதா?

என்னை விட்டு உன் நினைவை
நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?

ஏதோ ஏதோ
எந்தன்
இதயத்தை அழுத்தியதே..

அதோ அதோ
எந்தன்
உயிரையும் கொளுத்தியதே..

எந்த ஒரு இனிமையும்
எனக்கென்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்..

உன்னை விட்டு தன்னந்தனி
பாதை ஒன்று எனற்கில்லை
என்னிடத்தில் ஏன் கோபம்..

போதுமடி இந்த தொல்லை
என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண்மௌனம்..

பி.கு: கேட்டதும் பிடித்ததால் இங்கே..

Friday, May 09, 2008

குருவியும் குட்டையை குழப்பும் விமர்சனங்களும்...

மு.கு1: மக்கா, கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி. அதான் அதிகம் வரல இந்த பக்கம்... வருவேன்...

மு.கு2: இது எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. ஏற்கனவே சில பதிவர்கள் இப்படத்தை பற்றி தங்கள் கருத்தை சொல்லி உள்ளனர். அதே போல் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவ்வளவே...

மு.கு3: நான் விஜய் ரசிகன் அல்ல. நான் ரஜினி ரசிகன். நமக்கு ஒரே தலைவரு தான்! அவரு பேரு சொன்னா.. சும்மா அதிருமில்ல....

மு.கு4: விஜய் இப்பதிவை எழுத காசி கொடுக்கவில்லை :P (அண்ணா, கொடுக்கிறதுன்னா சொல்லுங்க, account number அனுப்பி வைக்கிறேன் ;) ) அதே மாதிரி, த்ரிஷா செம க்யூட் அப்படினு நினைக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை ;)
------------------------------------------------------------------------


குருவி.. உயர பறக்கும் என பார்த்தால் குட்டையை குழப்புகிறது. படம் மோசம் -- இந்த பாணியில் தான் பத்திரிக்கைகளும், பொதுவாக பதிவர்களும் விமர்சனம் எழுதி, கிண்டலடித்து உள்ளன. இதெல்லாம் படித்து விட்டு, சரி படத்துக்கு போக வேண்டாம் என தான் முடிவெடுத்து இருந்தேன். ஆனா, எங்க பக்கத்து வீட்டுல, ஒரு தீவிர விஜய் ரசிகை இருக்காள். பொண்ணுக்கு எட்டு வயசு. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் US தான். அவ்வளவா தமிழ் படம் பார்க்க மாட்டா. ஆனா, விஜய் என்றால் பிடிக்கும். இணையதளத்தில் விமர்சனங்கள் படித்து அவளை அழைத்து செல்ல யாருக்கும் தைரியம் இல்லாததால், நான் அழைத்து சென்றேன்.

படமும் பார்த்தாச்சு. பார்த்து முடிச்சதும் முதலில் மனதில் பட்டது, எதுக்கு இவ்வளவு நெகட்ட்டிவ் விமர்சனங்கள் படத்தை பற்றி? என்பது தான். அட ஆமாம்ப்பா, ஒத்துக்கொள்கின்றேன். படத்தின் ஸ்டண்ட்டுகள் நம்ப முடியவில்லை. லாஜிக் இடிக்குது. எல்லா விஜய் படத்திலும் இருக்கும் தீம் எட்டி பார்க்குது. காமெடி சரியில்லை. விவேக் இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். க்ளைமாக்ஸ் கொஞ்சாம் நீளம். வயலன்ஸ் ஜாஸ்தி.

So?

விஜய் படமுங்க! பேர பார்க்கல? தமிழ் படங்களில் ஸ்டண்ட்டுகள் நம்பும் படி எதில இருந்து இருக்கு? இல்ல லாஜிக் இடிக்காம எந்த படம் வந்து இருக்கு? (டாகுமெண்ட்டரி படங்கள் பத்தி பேச வேண்டாம் :P) எல்லா படத்திலும் விவேக் ஏதாவது இடத்தில் இரட்டை அர்த்த ஜோக்குகள் சொல்ல தான செய்யறார்!

என்ன நினைச்சீங்க? விக்ரம், கமல் , சிவாஜி மாதிரி.. விஜய்யோட ஆக்டிங் பெர்வார்மன்ஸ் பார்க்கவா போனீங்க? For Gods sake, he is an Entertainer. அவன் அப்படி தான் நடிப்பான்! ஏனா விஜய் is more to an entertainer side than he is to an actor side!!! இன்னுமா தெரியாது உங்களுக்கு?

ஏன் பத்திரிக்கைகள் இப்படி வாரி விடுகின்றன? எதுக்கு இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள். இந்த விமர்சங்கள் ஒரு பதிவுக்கு வரும் கமெண்ட் மாதிரி. முதல்ல ஒருத்தன் ஒன்னு சொன்னா, உடனே எல்லாரும் அதையே சொல்லவேண்டியது!

பாடல்களை கொஞ்சம் இனிமை ஆக்கி இருக்கலாம். அதை தவிற The film was entertaining. I went for a Vijay movie. and i got one. நான் என்ன அவன் ஆஸ்கார் ரேஞ்சுக்கு நடிப்பான். நான் படம் பார்த்து அப்படியே செண்ட்டி ஆகி அழனும்னா போனேன்!

அட சரி, சட்டையை கழட்டி சண்டை போடுறான். ஏன் ரஜினி செய்யலயா? எதுக்கு எல்லாருக்கும் வெவ்வேறு அளவுகோல்? அட தனுஷும் சிம்புவும் செய்யாத காமெடியா??

நக்கல் பன்னறது வேற. but it is different to kill a film by negative comments through out the media and internet!

இறுதியா, திரும்ப ட்ரைவ் செய்து வரும்போது, அந்த குட்டிப்பொண்ணு, "ஐ லைக் விஜய்.. படம் நல்லா இருந்துச்சுல்ல" அப்படினு சொன்னா. அப்ப யோசிக்க ஆரம்பித்தது தான் இதெல்லாம்! இனிமே படம் பார்க்கும் முன் அதை பற்றி பதிவுகளையோ, விமர்சனங்களையோ படிக்க கூடாது போல!

என்னமோ "பெரியார்" ரேஞ்சுல படம் எடுத்தா மட்டும் நீங்க பார்த்து ஓட வைக்க போறீங்களா.... ஒருத்தன் காமெடியா ...I mean entertaining ஆ படம் எடுத்தா உங்களுக்கு பிடிக்காதே! (அண்ணா, இதுல எந்த உள்குத்தும் இல்லைனா! அட..உங்களை வைச்சு காமெடி எதுவும் செய்யலனா!)

எனக்கு படம் பிடிச்சு இருந்தது. இதற்கு முந்தைய விஜய் படங்களில் இல்லாத எதுவும் இந்த படத்தில் புதுசா இல்லை! இது ஒரு விஜய் படம்!




அப்புறம் த்ரிஷாவும் இருக்காங்க!