காதல் பிறந்த கதை
---------------------------------------------------------------------
என்னைகாச்சும், நமக்கு வாழ்க்கையில நடந்ததை யோசிச்சு, மறந்துபோன முக மனிதர்கள் நியாபகம் வந்து, அவிங்க மேல திடீர்னு காதல் வருமா? எனக்கு அப்படி தான் வந்துச்சு. அட, என்னடா அது நமக்கு மட்டும் ஒரு பிகரும் சிக்க மாட்டேங்கிது அப்படினு, என் வாழ்க்கையில் இதற்கு முன் சந்தித்த பெண்களை எல்லாம் திருப்பி பார்த்து கொண்டிருந்தது என் மனம்.
முதன் முதலா, அட இந்த பொண்ணு அழகா இருக்கா என்று தோன்றிய 8ஆம் வகுப்பு ஸ்ரீவித்யா.. பசங்களும் பொண்ணுகளும் கலந்து உட்கார்ந்த வகுப்பறையில் என்னை வாடா போடா என்று பேசிய என் ஒரே ஸ்கூல் தோழி 6ஆம் வகுப்பு கிருத்திகா (அட.. அதுக்கு பின்னால பன்னி கழுதைனு எல்லாம் சொல்லுவா.. அதெல்லாம் எதுக்கு).. நான் கடன் வாங்கிய ஸ்கேலை தொலைத்து விட்டேன் என என்னை அடித்த 3ஆம் வகுப்பு குண்டு குட்டிப்பெண்.. அவளிடம் இருந்து என்னை காப்பாற்றிய என் 3ஆம் வகுப்பு உயிர் தோழி.. அவள். பெயரும் முகமும் மறந்த போனவள்.
இவளை பற்றி சொல்லியே ஆகனும். நான் அந்த ஸ்கூலில் ஒரே வருடம் படித்திருந்தாலும், புதிதாய் போய் சேர்ந்த இரெண்டாம் நாளே, 'என்ன உன் கிட்ட யாருமே பேசாமாட்டேங்கறாங்களா' என தானாய் வந்து பேசிய பெண். அப்பொழுது முழுகாம இருந்த என் அம்மா தினமும் சாப்பாட்டு எடுத்திட்டு வருவதை பார்த்து, "Aunty, நான் சாப்பட வைக்கின்றேன்.. நீங்க ஏன் தினமும் கஷ்டபடுகிறீர்கள்" என கேட்ட குட்டி தேவதை. நான் ஒரு மாதம் மானிட்டராக இருந்த பொழுது (அட.. Class leader பா.. computer monitor இல்லை) பசங்க பேசறாங்க என டீச்சரிடம் மாட்டி விட, அன்று மதியம் அடிக்க வந்த பசங்களை ஒட ஓட விரட்டி அடித்த வீர மங்கை.
எல்லாவற்றையும் விட, shoe லேஸ் கட்ட தெரியாதா என கிளாஸில் ஒரு டீச்சர், மொத்த வகுப்புக்கு முன்னே கேலி செய்து, அவிழ்ந்த லேஸ் கட்டிகொண்டு பின் வகுப்புக்குள் வா என வெளியே நிறுத்தி விட, நான் பேந்த பேந்த என முழிக்க, பின் நான் அழ ஆரம்பித்ததும், டீச்சர் அனுமதிக்க மறுத்த போதும், பயப்படாமல் எழுந்து வந்து என் shoe lace கட்டி விட்ட ... என் அழகிய தேவதை.
காதல்ல பல வகை உண்டு. ஆண் பெண் சங்கதி எல்லாம் தெரிந்து, இன கவர்ச்சியுடன் கலந்து வருவது மட்டும் காதல் இல்லை. இது வேற மாதிரி. எனக்கு சொல்ல தெரியல. எல்லாமே சொல்லி தான் தெரியனும்னு இல்லை. எப்படி இந்த பெண்ணை இவ்ளோ நாள் மறந்தேன்? அவள் முகம் பெயர் என எதுவுமே நியாபகம் இல்லை.. அவள் எனக்காக செய்தவைகளை தவிற. முகமும் பெயரும் தெரியவில்லை என்றாலும், அவளை பற்றி நினைத்ததும், மனதில் வீசும் அந்த மெல்லிய தென்றலை தவிற... வேறு சுவடே இல்லை.
ஒரு விதை மரமாவதில், எத்தனையோ நீர் துளிகள் தேவைப்படலாம். ஆனால், உயிரற்ற விதையில், உயிர் கலக்கிய அந்த முதல் மழைத்துளி ஆனவள் அவள். என் மனதில்.
இப்படி ஒரு பொண்ணு நியாபகம் வந்தால் எப்படிங்க காதல் வராம இருக்கும்.
'அம்மா.. நான் மூணாவது படிக்கறப்ப, ஒரு பொண்ணு வாசல்ல வந்து உங்க கிட்ட இருந்து லஞ்ச் பேக் வாங்கிட்டு வருவாளே.. அவள் பெயர் என்ன?'
'யாரு பிரியதர்ஷினியா? அவளை பத்தி எதுக்குடா கேட்கிற?'
'ஒன்னும் இல்லை சும்மா தான்..'
சில மாதங்கள் கழித்து, என் அலுவலக family party ஒன்றில்..
'அங்கிள், உங்க லேஸ் அவிழ்ந்து இருக்கு.' ஒரு குட்டிப்பெண் குழந்தை, ஆபிஸ் பார்ட்டியில் என்னிடம் அழைத்து சொன்னாள்.
குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், கொஞ்சம் பேச்சு கொடுத்துக்கொண்டு இருந்தேன்.சற்று நேரம் கழித்து ஒரு அழகிய பெண், அம்மாவாக இருக்கும் போல..
'ஓ இங்க இருக்கியா ஸ்வேதா' என சொல்லிக்கொண்டே வந்தாள்.
என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு, அவளும் பேசினாள்.. பேசிய பின் ஆச்சர்யம். ஆம் நீங்கள் யூகித்தது தான். அவளே தான். ப்ரியதர்ஷினி. என்னை இன்னமும் நியாபகம் வைத்திருந்தாள். மகிழ்ச்சியாய் இருந்தது.
'குழந்தை செம க்யூட்'
சொன்ன ஒரு சில வினாடிகள், என் கண்கள் ஏமாற்றத்தை காட்டின போலும்.
'என் குழந்தை இல்லை. என் அண்ணன் குழந்தை. எனக்கு இனிமே தான் டும் டும் டும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க'
'...'
'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.
இப்போ சொல்லுங்க.. காதல் பிறந்த கதை தான?