Sunday, April 27, 2008

அழகு குட்டி செல்லம்

இந்த கதை ஆரம்பிச்சது கொஞ்சம் பலமா காற்று வீசின அந்த நாளில். அப்போ தான், எங்க பேக்யார்ட் கதவு ஒன்னு, உடைந்து போனது. அடுத்த வாரம் மாற்றனும்னு ஒரு மாதமா சொல்லிட்டு இருக்கேன்! நேரம் தான் கிடைக்கல ;) (அட நிஜமா நான் ரொம்ப பிஜிங்க.. நம்புங்கனா..)

<>

சரி, நம்ம செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றலாம் என்று (யாருப்பா அது பக்கத்து வீட்டு வெள்ளைகாரிய சைட் அடிக்கனு தப்பா சொல்றது) வெளியில் வந்த எனற்கு சின்ன ஹார்ட் அட்டாக்! ஒரு குட்டிப்பொண்ணு, ஒரு நாய்க்குட்டி ரொம்ப ஜாலியா எங்க வீட்டு பின்னால விளையாடிட்டு இருக்காங்க! ஆஹா! என்னடா இது அப்படினு சுற்றும் முற்றும் யாரும் இருக்கார்களா என்று பார்த்தால், யாருமே இல்லை.

இதுக்கு முன்ன இந்த குழந்தையை நம்ம சுத்து வட்டாரத்துல பார்த்ததே இல்லை! சைனா சாயல் குழந்தை. சரி என்று வெளியில் சென்று குழந்தையிடம் பேச்சு கொடுத்தோம். நாய்க்குட்டியும் சரி அந்த பொண்ணும் சரி உடனே ஒட்டிக்கொண்டார்கள் என்னிடம். என்ன, பெயர் கேட்டால் தான் சொல்லவில்லை!

"What is your name"
'No'
"Does your mom know you are here?"
'No'
"Where is your house. Do you want to come out and show me"
'No'
"What you want to do?"
'Play Doggie'
"What is your name"
'No'

என பதில் சொல்லும் தெளிவான குழந்தை! நான் வெளியில் அவர்கள் பெற்றோர் இருக்கார்களா என தேட செல்கையில்

'Where are you going?'
"I am looking for your parents"
'Ok. come back soon'
"....."

முக்கால் மணி நேரம் ஆயிற்று. யாரும் வந்தாப்ல இல்ல. குழந்தையை தேடி. இவ்ளோ நேரமா குழந்தைய காணோம். இப்படியா இருப்பாங்க. சரி இன்னும் 15 நிமிஷம். யாரும் வரலை என்றால், போலீஸை அழைப்பதாக முடிவு செய்தோம்.

10 நிமிஷம் கழிச்சு, ஒரு சைனா ஜோடி,
'Sophiaa..'
என கத்திக்கொண்டே ரோட்டில் வந்தது. அப்புறம் என்ன, அந்த அம்மா ஒரே அழுகை, அவர் நன்றி சொல்ல, என்னை வீட்டுக்கு விளையாட வருமாறு அழைத்துவிட்டு பை பை சொல்லி சிரித்துக்கொண்டே சென்றாள் Sophia!

சரி, இது நடக்கும் பொழுதே, பதிவிடலாம் என முடிவு செய்வதால், செல்லில் க்ளிக்கியது தான் மேல் உள்ள புகைப்படம்!

----

முக்கால் மணி நேரம் குழந்தை காணாமல் போனது தெரியாமல் என்ன தான் செய்வார்களோ! ஏதோ எங்க வீட்டுக்கு வந்ததால் சரி. வார இறுதி ஆனால், தண்ணி அடித்து தாறு மாறாக கார் ஓட்டுபவர்களும் அதிகம்! இந்த ஊர் வேறு ஒரு மாதிரி ஊர்! என்னத்த பிள்ளைய பெத்து...

இதுக்கு நடுவில எங்கம்மா ஐடியா வேற, போலீஸ் வந்தும் யாரும் வரவில்லை என்றால், குழந்தையை நாமே வளர்க்கலாம் என்று! (நான் உடனே, நாய்க்குட்டு மட்டும் வேணும்னா வளர்க்க ஓகேனு சொன்னோம்ல!!) கலிகாலம்!

Wednesday, April 23, 2008

விழிக்கத்தி (அழகிய கவிதை VI)

இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி



எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்
கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்

இரவு முழுதும்
இனிய கனவுகள் தரும்
காதல்..
விழிகள் நெடுக
முட்கள் தைத்து தூங்க சொல்வாள்
காதலி..

சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்!



ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!
என்னாயிரம் கனவுகள் வென்றதால்
காதலியோ?

மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..



எதிரே நடக்கையில்
ஏதேச்சையாக
உந்தன் விழிக்கத்திகளை
வீசி செல்கின்றாய்..
தன் மேல் தான் எறிவதாக சொல்லி
துடிக்க மறுத்து அடம் செய்கின்றது
எனது இதயம்!

நீ நடந்து என் பக்கம் வர
உன் காலடி தடங்களில்
தெரிந்த காதல் சுவடுகள்..
நீ என்னை விட்டு விலகி
செல்லும் தடங்களில் மட்டும்
தெரியாமலேயே போனது..
நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?



ஓர் நாள் ஓர் மாதம்
என குறித்து வைத்து சொன்னாலும்
எல்லா நாளும் எல்லா மாதங்களும்
எனை குறித்து வைக்காமலேயே
கொன்று போகுது உன் காதல்.

இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்..


--
பி.கு: கடைசி இரண்டு கவிதைகள், காதலர் தினம் ஒட்டி எழுதியது. வெளியில சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Saturday, April 19, 2008

Once a Papa!

அட! சும்மா இருந்த என்னை பாட்டு, பாடனும்னு நம்மளை வைச்சு காமெடி செய்ய பார்க்கிறார் ஸ்ரீ!. சரி! இது ஒரு டேக்! நீங்க பள்ளி பாடத்துல படிச்ச பாடின பாட்டெல்லாம் போடனுமாம்! இப்படினு சொல்லிட்டு, எனக்கு தெரிஞ்ச அம்மா இங்கே வா வா பாடலை ஏற்கனவே சொல்லிடாங்க! எனக்கு சின்ன வயசுல பிடிக்கிற பாடல் எல்லாம் ரேஞ்சா தான் பிடிக்கும்.. பூப்போட்ட தாவணி... நேத்து ராத்திரி யமமா டைப்ல! அதெல்லாம் சொல்ல முடியுமா! அதுனால, நம்ம வாத்தியார் நடித்த அன்பே வா படத்துல எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு சொல்லிகிறேன்!

Once a Papa
Met a Mama
In a little Tourist Bus
என்னடி பாப்பா
சொன்னது டூப்பா
கன்னம் சிவந்தது
What is this!

My dear பாப்பா
காலையில் டோப்பா
What about the Hair oil
ஈவினிங் ப்யூட்டி
என்னடி ட்யூட்டி
meet me in the boardmail!



பி.கு: வழக்கம் போல ரூல்ஸ் எல்லாம் கண்டிப்பா தெரியனும்னா லீங்க்ல போய் பார்த்துகோங்க மக்கா! நான் நல்ல மூட்ல இருப்பதால, யாரையும் டேக் செய்யாம விட்டுடறேன்!

Sunday, April 13, 2008

இன்னும் ஒர் வருடம்..

இன்னும் ஒரு வருடம் முடிய இன்னும் ஒரு வருடம் தொடுங்குது! அதனால நான் எல்லார்க்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லிகிறேன்!

சர்வசித்து வருடம் முடிந்து, சர்வதாரி வருடம் ஆரம்பம் ஆகுது!



ஏவிய அம்பாய் இடர்கள் மறைந்திட
தாவிய மானென தாக்கள் பறந்திட (தா = வருத்தம்)
தூவிய பூவாய்ச் சுகங்கள் மணந்திட
பாவிய ஆலென பண்பு பரவிட
மேவிய வண்ணமாய் மெய்யருள் கூடிட
ஓவிய மென்றெம் உலகு சிறந்திட
காவிய கீத கலையுடன் ஓங்குக
மாவிய ஆண்டில் வளம்!

பி.கு: மக்கா, அர்த்தம் கேட்காதீங்க! நான் எழுதினது இல்ல! சும்மா நல்லா இருக்கேனு G3 செய்துட்டேன்!

Saturday, April 05, 2008

ஒற்றை வலி கவிதை (அழகிய கவிதை V)

இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை



ஒற்றை வரி கவிதை
காதல்
ஒற்றை வலி கவிதை
காதலி..

காதலில் என்ன பிடிக்கும்?
காத்திருத்தல்...
அதில் தான்
காதல் திருத்தமாக எழுதப்படும்



எத்தனை நாள் காத்திருந்தாலும்
மழையை வேண்டத்தான் செய்யும்
வரண்ட பூமி..
நானும் என் காத்திருப்பும் கூட
அப்படி தான்..

காதல் மொழி..
நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது



"உனக்கு என்ன சாமி பிடிக்கும்டா?"
'காதல் சாமி'
"அது எங்க இருக்கு?"
'என் கண் முன்னாடி'
வெட்கிச்சிரிக்கின்றாய்..
அட உண்மை தான்..
நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!

'உன் காதல் எவ்வளவு ஆழம்டா"
'ஐந்து அடி, மூன்று அங்குலம்'
'ஹையே..'
பழித்து காட்டியே
பறித்தும் கொள்கின்றாய்
என்னையும் என் கனவுகளையும்.



பட்டு மோசடி..
நீ தீண்டவென
உயிர் துறந்த
பட்டுப்பூச்சியின் நூற்புடவையை
எவனோ ஒருவன்
விலை போட்டு
உன்னிடமே விற்பது!

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர ஆராய்ந்தால் மட்டுமே மெய்யாம்..
விரல் தீண்டும் தூரம் வா
தேவதைகள் மெய்யா பொய்யா?
பார்க்கலாம்..

Tuesday, April 01, 2008

கடவுள் நிஜம் தான்

மு.கு: இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்.. பதிவு போடாம இருக்க முடியுமா? ;).. நம்மளை பத்தி நமக்கே தெரிந்து இருந்தா அடுத்தவங்க நம்மளை தேவை இல்லாம புதுசா முட்டாளாக்க முடியாது பாருங்க. அப்புறம் என்ன..எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------


எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் கண் எதிரில் ஒரு தவறு நடந்து அதை நீங்கள் தட்டி கேட்க தவறினால, அது உங்களை சேரும் பாவமா? .... நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க இந்த கூத்து நிறைவேறியது. இது என் தவறா?

அது ஒரு அழகிய கிராமம். சற்று பசுமை மறந்த வயல்வெளியின் அருகே நடந்தேறியது இந்த சம்பவம்.

'இந்த முறையும் பொட்ட புள்ளையா பிறந்தா, வாயில நெல்மணிய போட்டு முடிச்சுடு. என் கண்ணுல காட்டாத' வயதான பாட்டி ஒருத்தி உரத்த கத்தி கொண்டு இருந்தாள்.
அட.. என்ன நடக்குது என வீட்டிற்க்குள் எட்டி பார்த்தேன். ஒன்னு, இரண்டு, மூனு என வரிசையாக மூன்று பெண் குழந்தைகள் சுவறோரம் முகம் வீங்கி அமர்ந்து கொண்டிருந்தன. அழுததால் முகம் வீங்கி இருந்ததா இல்லை பசியினால் முகம் வீங்கி இருந்ததா என தெரியவில்லை.

'ஆத்தா, இந்த முறை மட்டும் பொட்டை புள்ளை பிறக்கட்டும்.. அப்புறம் வைச்சுகிறேன் அந்த ...' என கெட்ட வார்த்தையும் சகிதமுமாய், சாராய நெடியுடன் ஒருவன். குடும்ப தலைவன் போலும்.

திரை மறைக்கப்பட்டு பின்னால் ஒருத்தி பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்தாள். அருகே மருத்துவச்சி ஒருத்தி, துணையாய் இருந்தாள். நான் என்பதால், அவர்களிடம் அனுமதி கேட்காமலேயே எட்டி பார்த்தேன். அவள் துடிப்பதை பார்த்தால் இதுவும் பெண் குழந்தை தான் என எனக்கு தோன்றியது. சில நேரம் கழித்து, குழந்தையும் சுகமாய் பிறந்தது. என் யூகம் போலவே பெண் குழந்தை தான். என் யூகம் எப்பொழுதும் பொய்யானதே இல்லை!

'ங்ஏஏஏஏ' என அழுது கொண்டு இருந்த அவளின் பிஞ்சு விரல்களை தொட்டுப்பார்த்தேன். என் ஸ்பரிசம் பட்டதும் அழுவதை சட்டென்று நிறுத்தியது குழந்தை. யாரும் கவனிக்கவில்லை.

அழுகை நின்ற நிசப்தத்தில் 'என்னங்க வேணாங்க.. பச்சை குழந்தைங்க...' என முடியாமல் முனகி கொண்டிருந்த தாயின் முனகல் கேட்டது. அவள் கண்களில் கண்ணீர் அரும்ப ஆரம்பித்து இருந்தது.

'இதுவும் பொட்டையா, உன்னை கட்டிகிட்டதுக்கு எனக்கு வேணும்டி. என்னை கொலைகாரனா ஆக்கிட்டல... நீ ...' என கெட்ட வார்த்தையால் திட்டி கொண்டே, குழந்தையை பிடுங்கி சென்றான். என் ஸ்பரிசம் நீங்கியதில் குழந்தை மீண்டும் கத்த தொடங்கியது. 'மகமாயி என் புள்ளையை காப்பாத்து...' எனும் தாயின் கதறல், அந்த சப்தத்திலும் எனற்கு கேட்டது.

நான் அவளை விட்டு விட்டு, அவனை பார்க்க ஆரம்பித்தேன். அவன் நேராக அந்த குழந்தையின் முகம் கூட பாராமல், கிழவியிடம் செல்ல, கிழவி, பல முறை செய்த பழக்கத்தில், நெல்மணி கொண்டு குழந்தையின் அழுகையை நிறுத்தினாள் நிரந்திரமாக. அழகான குழந்தை உயிரற்ற பிணம் ஆயிற்று.

இதற்கு முன்பு பார்த்திருந்தாலும், ஏனோ மனசு கனமாக அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். இப்பொழுது சொல்லுங்கள். என் மேல் தவறா? நான் தடுத்து இருக்க வேண்டுமோ?

எப்படியோ.. அதை விட்டு விட்டு நகரத்திற்கு வந்தேன். ஸ்கூல் ட்ரெஸ்ஸில் ஒரு 4ஆம் வகுப்பு சிறுமி ஒரு கோவிலின் முன் நின்று 'சாமி, இன்னைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு. நீ தான் என்னை பாஸ் செய்ய வைக்கனும்' என வேண்டிக்கொண்டிருந்தாள்.

எனற்கோ 'மகமாயி.. என் புள்ளையை காப்பாத்து' என கெஞ்சிய அந்த தாயின் ஞாபகம் தான் வந்தது. திடீரென்று சிரிக்க தொடங்கினேன்..... மழை கொட்ட தொடங்கியது.

நான் கடவுள்.

----------------------
பி.கு: Story Inspired by http://godisimaginary.com/. Even though the Site talks mainly about western religions, obviously the reasoning can be cross applied acros all religions. Well, today happens to be April 1st. What better date to bring out how we are fooling ourselves! (Doesn't mean I am going to stop fooling myself)